இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் திரும்பியவர் தடுப்பிலிருந்த நிலையில் சாவு

0

இந்தியாவிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் நாட்டுக்கு வருகை தந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (ஓகஸ்ட் 11) செவ்வாய்கிழமை உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் (வயது-50) என்பவரே நீரிழிவு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்திய முகாங்களில் தங்கிருந்த இருவர் உள்பட சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ஜூலை 11ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் இன்று (ஜூலை 11) சனிக்கிழமை காலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்று சோதனையிடப்பட்டது.

அந்தப் படகில் படகு ஓட்டியுடன் நால்வர் பயணித்தனர். அவர்களில் இருவர் இந்திய முகாம்களிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக நாடு திரும்பியவர்கள் என்று விசாரணைகளில் தெரிய வந்தது.

நால்வரும் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸார் மூலம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். நான்கு பேரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவேண்டிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

அவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.