முதல் கோரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய ஜனாதிபதி

0

கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் போட்டிகளுக்கு மத்தியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கோரோனா வைரஸ் தடுப்பூசியை இன்று அறிமுகப்படுத்தினார். இது உலகின் முதல் தடுப்பூசி என்று கூறப்படுகிறது.

உலகெங்கிலும் கோரோனா தொற்றுகள் மற்றும் இறப்புக்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கோரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக ரஷ்யா உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, இன்று ( ஓகஸ்ட் 12 ஆம் தேதி) கோரோனா வைரஸ் தடுப்பூசியைப் வெளியிட்ட உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடின் இதை செய்தியாளர்களிடம் முறைப்படி இன்று அறிவித்தார்.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது;

ரஷ்யா முதல் கோரோனா வைரஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, மனித மருத்துவ பரிசோதனைகளின் மூன்று கட்டங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டது.

சோதனைகளின் போது தடுப்பூசி திறமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கோரோனா வைரஸிலிருந்து நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது – என்றார்.

இதற்கிடையே ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தடுப்பூசியானது முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதன் மூலம் கோரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. இருப்பினும், ரஷ்யாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல விஞ்ஞானிகள், மாதக்கணக்கில் நீடிக்கும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னர், அவசர அவசரமாக தடுப்பூசியை பதிவு செய்வதற்கான முடிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

மூன்றாம் கட்ட சோதனைகள் பொதுவாக சில மாதங்களுக்கு நீடிக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.