அனைத்துப் பல்கலைகளின் கல்வி நடவடிக்கைகளும் திங்களன்று ஆரம்பம்

0

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று மாலை அறிவித்துள்ளார்.

கோவிட் -19 நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நாட்டில் முடக்கம் கொண்டுவரப்பட்ட நிலையில் மூடப்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை வரும் 17ஆம் திகதி முழுமையாக மீளத் திரும்பவுள்ளது.

சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுமாறு அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

விடுதிகளில் முன்னர் நடைமுறையில் இருந்த ஒரு மாணவருக்கு ஒரு அறை மாத்திரம் என்ற முறை தற்பொழுது கோவிட் 19 அச்சுறுத்தல் குறைந்திருப்பதனால் மாணவர்கள் வழமை போன்று விடுதிகளில் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சகல பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் சகல போதனை சாரா ஊழியர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் முழுமையாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.