யாழ்.மாநகர தீயணைப்பு வாகனத்துக்கு பெறுமதி குறைத்து காப்புறுதி செய்ததால் சிக்கல்

0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்துக்கு காப்புறுதி செய்தமையில் தவறான முறமை பின்பற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் பணித்துள்ளார்.

இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், ஊடகவியலாளர் ந.லோகதயாளன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 2014ஆம் ஆண்டு 38 மில்லியன் (3 கோடியே 80 லட்சம்) ரூபாய் பெறுமதிக்கு புதிதாக கிடைத்த தீ அணைப்பு வாகனத்திற்கு வெறும் 6.86 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்டு வருடாத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் காப்புறுதிக் கட்டணமாகச் செலுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த வாகனம் கடந்த ஜூன் 16ஆம் திகதியன்று விபத்திற்குள்ளாகி முழுமையான சேதம் அடைந்துள்ளது. அதனைத் திருத்த மதிப்பிடப்படும் ஒரு கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஒரு தொகை நிதி சபையின் பொறுப்பிலேயே செலவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறு அதிகாரிகனாலேயே ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் விபத்திற்குள்ளான வாகனமும் இழுத்து வரப்பட்டு சபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வாகனம் சபைக்கு கிடைத்து காப்புறுதி செய்யப்பட்ட காலத்தில் சபை இயங்கியுள்ளது. இவ்வாறு தவறான காப்புறுதி செய்யப்பட்ட காலத்தில் மூன்று ஆணையாளர்கள் பதவி வகித்த அதேநேரம் 5 ஆண்டுகள் புதிய வாகனத்திற்கு அதே பெறுமதியிலும் அதன் பின்னர் பெறுமதி மதிப்பிடப்பட வேண்டும் என்ற விதிமுறையும் 2019ஆம் ஆண்டு முதல் மீறப்பட்டமையினாலேயே இதனை கண்டுகொள்ள முடியவில்லை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து உரிய நிர்வாக , நிதி நடைமுறைகளிற்கமைய நடவடிக்கை மேற்கொண்டு இதற்கான உரிய தீர்வை முன்வைக்குமாறு கோரி மாநகர சபை வடக்கு மாகாண ஆளுநர் , பிரதம செயலாளர் , உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

இவற்றின் அடிப்படையிலேயே காப்புறுதி செய்தமையில் தவறான முறமை பின்பற்றப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் பணித்துள்ளார் – என்றார்.