தங்கத்தின் விலை இன்று 2,500 ரூபாயால் எகிறியது

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 ரூபாயால் அதிகரித்துள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூயாயாக அதிகரித்துள்ளது.

தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கடந்த திங்கட்கிழமை அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயால் குறைக்கப்படும் என எதிபார்க்கப்பட்டது. எனினும் இறக்குமதி மீதான வரி நீக்கத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் இந்த மாதம் தங்கத்தின் விலை சரிவைக் கண்டது. எனினும் நேற்றும் இன்றுமாக தங்கத்தின் விலை 3 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (செப்ரெம்பர் 15 ) செவ்வாய்க்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  92 ஆயிரத்து 580 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 90 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று 98 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்பட்டது.