தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவேந்தல் ஆரம்பம்

0

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒற்றுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.

1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த 33ஆவது ஆண்டு நினைவு நாளான, இன்று நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த வழமை போன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் பெற்ற தடைக்கு அமைவாக இளைஞர்களால் அமைக்க தியாக தீபம் திலீபனின் உருவப்படம் மற்றும் வளைவுகள் நேற்றிரவு பொலிஸாரால் அகற்றப்பட்டன.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், சிறப்பான இடம் ஒன்றில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுக்கு தயாரான நிலையில் கோப்பாய் பொலிஸார் அவற்றை அகற்றியுள்ளனர் .

இந்த நிலையில் கோப்பாய் – உரும்பிராய் பகுதியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் இன்று நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார்.

ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, இந்த வணக்க நிகழ்வை அவர் நடத்தினார்

எனினும் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.