தனது வாக்கை காப்பாற்றினார் டெனிஸ்வரன்; விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கை மீளப்பெற்றார் – தமிழ் சட்டத்தரணிகள் சமூகம் பாராட்டு

0

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமானஙநீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நீதிமன்ற கட்டளையை அவமதித்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டி தொடந்த வழக்கை வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மீளப்பெற்றுள்ளார்.

சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியமை தமிழ் சட்டத்தரணிகள் சமூகம் பாராட்டியுள்ளது.

தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக சட்டதரணி டெனிஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் 29.06.2018 அன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

முதன்மை வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன் முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

சட்டத்தரணி டெனிஸ்வரன் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெருமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

நீதியரசர் விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கினர்.

இவ்வழக்கில் நீதியரசர் விக்கினேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு குறைந்தது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை பேரினவாதத் தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர்.

சட்டத்தரணி பா.டெனிஸ்வரனின் சட்டவாளர் சுரேன் பெர்னாண்டோ சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

அதனாலேயே தமிழ் கல்வியாளர்கள், தமிழ் சட்டத்தரணிகள் சமூகமும் இந்த வழக்கை சட்டத்தரணி டெனீஸ்வரன் மீளப் பெறவேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பில் கல்வியாளர்களின் ஆலோசனையை முதல்வன் வெளிப்படுத்தினான். முதல்வன் பதிவையடுத்து அந்த வழக்கை மீளப்பெறுவதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் அறிவித்தார்.

இதுதொடர்பில் தனது சட்டத்தரணியிடம் நிலைப்பாட்டை பா.டெனிஸ்வரன் இடித்துரைத்தார்.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்கினேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நேற்று (செப். 15) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமை தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றி அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு மனுவை மீளப்பெறுவதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் சார்பில் சட்டவாளர் மன்றுக்கு அறிவித்தார்.

மனுவை மீளப்பெறும் மனுதாரரின் முடிவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஒப்புதல் வழங்கியது.

மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நிறைவடைந்து வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் ஊடகங்கள் முன்னிலையில் கை கொடுத்தனர்.

“நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழலில் அனைத்து தமிழர் தரப்பும் ஒற்றுமையுடன் ஒரு தரப்பாக இணைந்து செயற்படவேண்டும். பிரிந்து நிற்பதால் தமிழ் மக்களுக்குதான் பாதகம்.

எனவே தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழர் அரசியல் தரப்புகள் பிரிந்து நிற்காமல் இணைந்து செயற்பட வேண்டும். அதன் ஒரு வெளிப்பாடே நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கை மீளப்பெற்றமையாகும்” என்று சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், ஊடகங்களிடம் தெரிவித்தார்.