2022 ஏஎல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஓகஸ்ட் 19ஆம் திகதிவரை இணையவழியில் ஏற்கப்படும்

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அனைத்து விண்ணப்பதாரர்களும் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்க தொலைபேசி செயலி DoE (DOE) ஊடாக தமது விண்ணப்பங்களை சரியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்தார்.

இதனிடையே, பாடசாலை மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு ஏற்கனவே அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தனிப்பட்ட முறையில் இணையவழி விண்ணப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.

மேலும், இப் பரீட்சைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் 2021ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.