இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 0.2 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி, நேற்றைய நிலவரப்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 360.39 ரூபாவாகவும் விற்பனை விலை 371.46 ரூபாவாகவும் காணப்பட்டது.
இதேவேளை, குறுக்கு நாணய மாற்று வீத நகர்வுகளின் அடிப்படையில், இந்த வருடத்தின் முதல் 13 நாட்களில் யூரோவிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 1.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை ரூபாவிற்கு எதிராக பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் இந்திய ரூபாயும் முறையே 1 வீதம் மற்றும் 1.8 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜப்பானிய யென் மதிப்பும் இந்த ஆண்டு இதுவரை ரூபாய்க்கு எதிராக 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு அனைத்து முக்கிய நாணயங்களுக்கும் எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வெகுவாக வீழ்ச்சியடைந்தது.
இருப்பினும், 2022 இன் பிற்பகுதியில், பல நிதி மற்றும் பணவியல் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக, முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சிறப்பாகச் செயல்பட்டது என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.