3 வருடங்களுக்கு மேலாக மாணவர் ஒருவரின் பல்கலை அனுமதியை பறிப்பது அடிப்படை உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் ஒருவரின் பல்கலைக்கழக அனுமதியை மூன்று வருடங்களுக்கு மேலாகப் பறிப்பது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா வழங்கிய தீர்ப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவர் மலித் சசிந்தக்க தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை  இன்று வழங்கப்பட்டது.

இதன்படி, அடுத்த வருடம் குறித்த மாணவனை பொருத்தமான பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளுமாறும், மனுதாரர் மாணவருக்கு 5 லட்சம் ரூபாயை மனுக் கட்டணமாக செலுத்துமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரர் 2018ஆம் ஆண்டு உயர்தர கலைப் பிரிவில் தோன்றி 3 “ஏ” சித்திகளைப் பெற்றதாகக் கூறுகிறார்.

இதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நான்காவது இடத்துக்கும் அகில இலங்கை ரீதியில் 99வது இடத்துக்கும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் சட்ட பீடங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த போதிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவற்றை நிராகரித்துள்ளதாக மனுதாரர் மனுவில் தெரிவித்தார்.

காலி லபுதுவ தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் டிப்ளோமா பாடநெறிக்காக பதிவு செய்துள்ளதாக தெரிவித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனது பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி நஷனல் இன்ஸ்டிடியூட் ஒஃப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜியின் நுழைவுப் பரீட்சைக்கு தோற்றிய போதிலும், அந்த நிறுவனத்தில் எந்த பாடநெறிக்கும் தாம் பதிவு செய்யவில்லை என்றும் அவர் தனது மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது பெயர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கணினி அமைப்பில் தவறுதலாக இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தை மாற்ற முடியாது என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மனுதாரர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட விவாதத்துக்குப் பின்னர் தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்றத்தின் 3 நீதியரசர் அடங்கிய அமர்வு, மனுதாரரான மாணவரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தது.

பிரதிவாதிகளின் நடவடிக்கையினால் மாணவன் மூன்று வருட கல்வியை இழந்துள்ளதாக தெரிவித்த உயர் நீதிமன்றம், மாணவர்களை அடுத்த வருடம் பொருத்தமான பல்கலைக்கழகத்தில் உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.