4000 பெண்களுக்கு கருத்தடை செய்வது சாத்தியமா? ஓர் விஞ்ஞான ரீதியான அலசல்

0

குருணாகல் போதனா வைத்தியசாலை மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக சுமார் 4000 சிங்களப் பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையை மேற்கொண்டார் என்று திவயின சிங்கள நாளிதழ் கடந்தவாரம் செய்தி வெளியிட்டது.

சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை செய்தார் என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று அதனைத் தொடர்ந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபிதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சந்தேகத்துக்கு இடமான வகையில் சொத்துக்களைச் சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டார். மருத்துவர், குற்றப் புலனாய்வுப்பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.

அதேவேளை, சந்தேகநபரான மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாடுகளில், நான்கு முறைப்பாடுகள் அவருடன் பணியாற்றிய மருத்துவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பெருந்தொகையான பெண்களுக்கு மருத்துவர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் கருத்தடை சிகிச்சையினை செய்யமுடியுமா? என்பதை ஆராய்வதே இப்பத்தியின் நோக்கம் ஆகும்.

முதலில் நாம் பெண்ணின் இனப்பெருக்கதொகுதியில் உள்ள சில உறுப்புகளின் தொழில்பாட்டினை பார்ப்போம் .இங்கு பலோப்பியன் குழாய் என்பது சூலகத்தில் இருந்து முட்டையினை பெண்ணின் கருப்பையினை நோக்கி கடத்தும் ஓர் மெல்லிய குழாய் ஆகும்.

வழமையாக கருத்தடை சத்திரசிகிச்சையின் பொழுது வலது மற்றும் இடது பக்கங்களில் உள்ள இரு குழாய்களும் வெட்டிகட்டபடும் அல்லது இருபக்க குழாய்களிலும் உலோகத்தினால் ஆன கிளிப் போடப்படும்.

சில சந்தர்ப்பங்களில் இறப்பர்பாண்ட் போன்ற ஒன்று போட்டுவிடப்படும் (விபரங்களுக்கு படத்தினை பார்க்கவும்).
இதனை தொடர்ந்து பலோப்பியன் குழாய் அடைபடும். இதனால் முட்டை கருப்பையினை நோக்கிசென்று ஆணின் விந்துடன் இணைந்து கரு உருவாவது தடுக்கபடும்.

இந்த பலோப்பியன் குழாயில்தான் சிலவேளைகளில் கருவானது தங்கி வளரும்பொழுது இடம்போதாமையினால் பலோப்பியன்குழாய் வெடிக்கும். இதனால் அதிக குருதி வெளியேறி சில சந்தர்ப்பங்களில் தாயிற்கு இறப்புகூட ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

ImageImage

இங்கு முக்கிய குற்றசாட்டுயாதெனில் சிசேரியன் சத்திரசிகிச்சையின் பொழுது மருத்துவர் வேண்டும் என்றே இரு பலோப்பியன் குழாய்களினை சேதப்படுத்தி எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதைத் தடுத்தார் என்பதே ஆகும் .

அதாவது இங்கு வைத்தியசாலைகளில் வழமையாக மேற்கொள்ளப்படும் கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளபடவில்லை மாறாக குறிப்பிட்ட மருத்துவர் வேண்டும் என்றே சத்திரசிகிச்சை உபகாரணங்களினாலும் கையினாலும் பலோப்பியன் குழாயினையும் அதனோடு இணைந்த பகுதிகளையும் சேதப்படுத்தி எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதினை இல்லாமல் செய்தார் என்பதே ஆகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் கர்ப்பத்தடையினை உண்டாக்கலாமா? என்பது பற்றி அடுத்து ஆராய்வோம்.

ஓர் சத்திரசிகிச்சை நடைபெறும் பொழுது அதனை செய்யும் மருத்துவர், அவருக்கான உதவிபுரியும் மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், இரண்டு அல்லது மூன்று தாதியர், ஒன்று அல்லது இரண்டு சிற்றூழியர் ஆகியோர் கடமையில் இருப்பார்கள்.

இவர்களில் பலர் சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவரினைவிட பல பிள்ளை பெற்று சத்திரசிகிச்சைகளை நேரில்பார்த்து அனுபவம் பெற்றவராய் இருப்பர்.

இவர்கள் சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர் எதாவது பிழையான அல்லது தேவையற்றபடி முறைகளில் ஈடுபட்டால் கட்டாயம் கவனிப்பார்கள்.

இவ்வாறான செயற்ப்பாடுகளினால் கடந்த காலங்களில் சத்திரசிகிச்சை கூடத்தில் மருத்துவர்களுக்கும் தாதியர்க்கும் கருத்து வேறுபாடுகள் உண்டாகியமை பலரும் அறிந்ததே.

இவ்வாறான நிலையில் மேற்குறித்த சக ஊழியர்களுக்கு தெரியாமல் அதுவும் 4000 என்ற பெரிய அளவில் பலோப்பியன் குழாய்க்கு சேதாரத்தினை உண்டு பண்னுவது கடினமே.

இவ்வாறு கருத்தடையினை செய்தாலும் இங்கு குற்றசாட்டப்பட்டுள்ள முறையின் வினைத்திறன் (Effectiveness) சந்தேகத்திற்கு உரியதே. அதுவும் 4000 பெண்களுக்கு (தற்பொழுது அதேபத்திரிக்கை 8000 என்று சொல்கின்றது)
வெற்றிகரமாக கர்ப்பத் தடையினை உருவாக்குவது என்பது சந்தேகத்திற்குரியதே.

மேலும் சிலர் கூறுகின்றனர் சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பொழுது சாதாரணமாக கருப்பபையினை இடுப்பு குழியில் இருந்து வெளியில் எடுப்பதில்லை. மாறாக அது உள்ளே இறுக்கத்தக்கதாகவே LSCS சிகிச்சை மேற்கொள்ளபடுகின்றது.

இந்நிலையில் மருத்துவர் கையை உள்ளே செலுத்திகையினால் பலோப்பியன் குழாயினை சேதமாக்குவது சாத்தியம் என்று சொல்கின்றனர்.

ஆனால் வெளியே மருத்துவர் மற்றவர்களுடன் சாதாரணமாக கதைத்து கொண்டு கையினால் இடுப்புகுழியில் உள்ள உள் அங்கங்களை தடவி தேடிக்கண்டுபிடித்து சேதமாக்குவது என்பது மிகவும் ஆபத்தானது. ஏன்னெனில் கண்ணால் பார்த்தே சத்திரசிகிச்சை செய்யும்பொழுது பலோப்பியன் குழாயிற்கு பதிலாக குடல்வளரி, குடல், சிறுநீர்க்குழாய் போன்ற பலோப்பியன் குழாயினை ஒத்த உள்ளக அங்கங்களை வெட்டிகட்டிய சம்பவங்கள் நிறையவே மருத்துவத் துறையில் உண்டு.

அதுவும் இவ்வாறு உள்ளக அங்கங்களை சேதப்படுத்தாமல் 4000 பேருக்கு பலோப்பியன் குழாய்க்கு சேதாரத்தினை உண்டுபண்னுவது கடினமே.

மேலும் அவ்வாறு மற்றைய உள்ளக அங்கங்களினை சேதபடுத்தாமல் பலோப்பியன் குழாயினை மட்டும் சேதபடுத்துவது கூட கடினமானதே ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது பலோப்பியன் குழாயில் உள்ள குருதிக் குழாய்களும் சேதமடைந்து உடலினுள் குருதிக் கசிவு ஏற்படும் (படத்தில் பலோப்பியன் குழாயிற்கான குருதி வழங்களினை பார்வையிடவும்).

இதனால் ஓரிரு நாள்களின் பின்னர் மீண்டும் சத்திரசிகிச்சைக்கு செல்லவேண்டிவரும் இதன்பொழுது இத்தவறுகள் இலகுவாக கண்டுபிடிக்கபட்டுவிடும். சாதாரணமாக LRT சத்திரசிகிச்சையின் பொழுது மருத்துவர்கள் பலோப்பியன் குழாயினை வெட்டி பலமுறை கட்டுபோட்டு வெட்டிய இடத்தில் குருதிப்போக்கு இல்லை என்பதினை பலமுறை உறுதிபடுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

இவ்வாறு உள்ளக அங்கங்களை சேதப்படுத்தாமல் குறித்த பலோப்பியன்குழாய்களை மட்டுமே சேதப்படுத்தி அதில் அடைப்பினை உண்டாக்குவதன் மூலம் கர்ப்பத்தடையினை மேற்கொள்ளலாம். ஏனெனில் அதுவே உலகத்தில் கண்டுபிடிக்கபட்ட புதிய முறையாக இருக்கும்.

மேலும் பலர் தற்பொழுது குறித்த மருத்துவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்வது பற்றி, இவ்வாறு பல பெண்கள் தாம் அறுவைச் சிகிச்சை மூலம் குறித்த மருத்துவரிடம் குழந்தையினை பிரசவித்த பின்னர் தமக்கு குழந்தை கிடைக்கவில்லை என்று முறைப்பாடு செய்கின்றார்கள்.

இவர்களுக்கு ஏன் அறுவைச் சிகிச்சையின் பின்னர் தமக்கு குழந்தை கிடைக்கவில்லை என்று விஞ்ஞானரீதியில் ஆராயப்படவேண்டும். அதாவது இவர்களுக்கு இவர்களில் பலோப்பியன் குழாயில் சத்திரசிகிச்சையின் பின்னர் அடைப்பு (tubal block ) ஏற்படதா என்று கண்டறியபட வேண்டும்.

மிக இலகுவாக Hysterosalpingogram (HSG) என்ற X-ray பரிசோதனையினை மெற்கோள்வதன் மூலம் இதனை கண்டுபிடிக்கலாம். தேவை ஏற்படின் Lap and dye என்ற பரிசோதனை மூலமும் இரு பலோப்பியன்குழாய்களிலும் அடைப்பு இருக்கின்றதா என்று கண்டறியலாம்.

ஆனால் இவ்வாறு அடைப்பு இருப்பது கண்டறியபட்டால் அது குறித்த மருத்துவரின் செயற்பாடு காரணமாகவே உருவாக்கியது என்று நிச்சயமாக கூறமுடியாது.

இவ்வாறு இரு பலோப்பியன் குழாய்களிலும் அடைப்புகள் பல்வேறுபட்ட பிற காரணிகளால் உருவாகலாம். முக்கியமாக கிருமித்தொற்று (infection) மற்றும் முன்பு மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் அறுவைச்சிகிச்சை (previous abdominal and pelvic surgeries) போன்றன இவற்றில் குறிப்பிடதக்கது. சாதாரணமாக குற்றவியல் வழக்குகளில் குற்றமானது சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கபடவேண்டும்.

மேலும் குறிப்பிட்ட பெண்களுக்கு குழந்தை கிடைக்காமைக்கு வேறு காரணங்களும் இருக்கலாம். அதாவது அவர்களின் வயது, நீரிழிவு போன்ற நோய்களின் தோற்றம் மற்றும் வேறு கருத்தடை முறைகளின் பாவனை போன்றன காரணமாக அவர்களுக்கு குழந்தை கிடைக்காது இருந்திருக்கலாம்.

மருத்துவர் மீதான குற்றசாட்டினை நாம் முற்றுமுழுதாகவும் நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் இவ்வாறான முறை மூலம் கருத்தடை ஏற்படுவதாக குற்றம்சாட்டபடுவது இலங்கையில் இதுவே முதன்முறை என்பதாலும் இக்குற்றசாட்டு இனக்களிடையே பதற்றத்தினை உண்டாக்க கூடியதோடு சமூகத்தில் மருத்துவர்கள் மீதான நம்பிக்கையினை முற்றுமுழுதாக இல்லாமல் செய்துவிடும்.

எனவே இக் குற்றசாட்டு சம்மந்தமாக பாரபட்ஷம் அற்ற விஞ்ஞாரீதியான விசாரணை ஒன்று நிபுணர்கள் குழுவால் நாடாத்தபட்டு விசாரணை முடிவுகள் மக்களுக்கு பகிரங்கபடுத்தப்படவேண்டும்.

மேலும் இந்த மருத்துவர் தீவிரவாத குழுவுடன் சம்பந்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் கட்டாயமமானதே.
மேலும் இவ்வாறன பொய் குற்றசாட்டுக்கள் அரசியல் நோக்கங்களுக்காகவும், தனிப்பட்ட தொழில் போட்டி காரணமாகவும் மற்றும் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் மேற்கொள்ளபடலாம் என்பது குறிப்பிடதக்கது.

முதல்வனின் மருத்துவ ஆய்வாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here