இலங்கை போக்குவரத்து சபைக்கு 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகள் பற்றாக்குறை காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சில சந்தர்ப்பங்களில் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 800 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் சமீபத்திய அமர்வின் போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் எண்ணிக்கை தற்போது 26 ஆயிரத்து 561 பேராக உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பல்வேறு ஒழுங்குப் பிரச்சினைகளால் சில ஊழியர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்படாமல் சம்பளம் வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றினர்.
அரசிடம் இருந்து தேவையான அனுமதி பெற்று வெற்றிடமான பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என துறைசார் கண்காணிப்பு குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த ஆண்டு 485 மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது. 2021இல், கோவிட்-19 நெருக்கடி காரணமாக, 3,059 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.