ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று (பெப்ரவரி 8) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
புதிய அமர்வின் சம்பிரதாயத் தொடக்கத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அரசமைப்பின் 33 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அரசின் கொள்கை அறிக்கையை முற்பகல் 10 மணிக்கு முன்வைக்க உள்ளார்.
துப்பாக்கி வேட்டு வணக்கங்களோ, வாகன அணிவகுப்புகளோ இடம்பெறாது என்று நாடாளுமன்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, ஜனாதிபதி விக்ரமசிங்கவை முப்படையினரின் மரியாதையுடன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக வரவேற்கப்படும். அங்கு ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது. தேசியக் கொடி மட்டுமே ஏற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்களின் வருகை முற்பகல் 9.25 மணி வரை நடைபெறும்.
முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வருகையும் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தின் முதன்மை படிக்கட்டுகளில் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்கவுள்ளனர்.
பின்னர் சபாநாயகரும் நாடாளுமன்ற செயலாளர் நாயகமும் ஜனாதிபதியை சார்ஜென்ட், பிரதி சார்ஜென்ட் மற்றும் உதவி சார்ஜென்ட் அட் ஆர்ம்ஸ் ஆகியோருடன் நாடாளுமன்ற கட்டடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அப்போது பாடசாலை மாணவர்கள் ஜெயமங்கல கதா ஓதுவார்கள்.
நாடாளுமன்ற மரபுப்படி, பிரதி சார்ஜென்ட், ஆயுதமேந்திய சார்ஜென்ட், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர்கள் மற்றும் உதவி சார்ஜென்ட் ஆகியோர் அணிவகுத்து அறைக்குள் நுழைவர்.
அறைக்குள் நுழைந்த பிறகு, ஜனாதிபதி அமர்வுக்கு தலைமை தாங்குகிறார். அதே நேரத்தில் ஜனாதிபதியின் இருக்கையில் ஜனாதிபதியின் சின்னத்திற்கு பதிலாக அரச சின்னம் குறிக்கப்படும்.
ஜனாதிபதியினால் அரசின் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்படும். அவரது உரையின் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை நாளை முற்பகல் 9.30 மணி வரை ஒத்திவைக்கவுள்ளார்.
அதன்பிறகு, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் ஆகியோரின் துணையுடன் ஜனாதிபதி அவையில் இருந்து வெளியேறுவார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பல அதிகாரிகள் இதில் பங்கேற்பர் என்று சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.